திவ்ய தேசம் 7 - திருக்கூடலூர்
இவ்வைணவ திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஆறு கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு, ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு.
...................மூலவர் தரிசனம்...................
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உத்சவருக்கும் அதே திருநாமம் தான்! மூலவ மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர் என்பது விசேஷம். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.
....................உத்சவ மூர்த்தி.................
தீர்த்தமும், விமானமும் முறையே சக்ர தீர்த்தம், சுத்தஸத்வ விமானம் என்று அறியப்படுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் பலா ஆகும். கோயிலுக்குள் இருக்கும் பலா மரத்தில் சுயம்புவாக திருச்சங்கின் வடிவம் உருவாகியிருப்பதைக் காணலாம்.
ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. அவர்களின் வேண்டுதலே, எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்கக் காரணமானது !
....................நரஸிம்ம மூர்த்தி .....................
நந்தக முனிவரின் மகளான உஷய், தலப்பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மேல் மையல் கொண்ட சோழ மன்னன் ஒருவன் அவளை மணந்ததாகவும், அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களை நம்பி அவளை விட்டுப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழக் காரணமாக இருந்ததாகவும், அதனாலேயே இத்தலம் 'கூடலூர்' என்ற பெயர் பெற்றதாகவும் மற்றொரு பழங்கதை சொல்கிறது.
................மணவாள மாமுனிகள்..............
காவிரி, இவ்விடத்தில் திருமாலை வணங்கி, பாப விமோசனம் பெற்று, இழந்த பொலிவை திரும்ப அடைந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அம்பரீசன், திருமங்கையாழ்வார், பிரம்மன், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று, அவரை வழிபட்ட புண்ணியத் தலமிது.
.......................சக்கரத்தாழ்வார்.................
இவ்வைணவ திருப்பதியை திருமங்கையாழ்வார், அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.
**************************************
1358@..
தாம்* தம்பெருமையறியார்*
தூதுவேந்தர்க்காய* வேந்தர்ஊர்போல்*
காந்தள்விரல்* மென்கலை நன்மடவார்*
கூந்தல்கமழும்* கூடலூரே (5.2.1)
******************************
1359@
செறும்திண்* திமிலேறுடைய* பின்னை
பெறும்தண்கோலம்* பெற்றார்ஊர்ப்போல்*
நறுந்தன்தீம்* தேன்உண்டவண்டு*
குறிஞ்சிபாடும்* கூடலூரே (5.2.2)
********************************
1360@
பிள்ளைஉருவாய்த்* தயிருண்டு* அடியேன்
உள்ளம்புகுந்த * ஒருவரூர்போல்*
கள்ளநாரை* வயலுள்* கயல்மீன்
கொள்ளைகொள்ளும்* கூடலூரே (5.2.3)
என் அண்ணல், கோகுலத்து பாலகனாய், வாயிலிருந்து ஒழுக ஒழுக தயிரை உண்டு, என் உள்ளம் புகுந்த கள்வன் ! நாரைகள் வயல்களில் நின்றபடி காத்திருந்து, சூழ்ச்சியாக மீன்களை நீரிலிருந்து கவ்வியெடுக்கும் திருக்கூடலூரில் ஒப்பிலா அப்பிரானே எழுந்தருளியிருக்கிறான்.
********************************
1361@
கூற்றேருருவின்* குறளாய்* நிலம்நீர்
ஏற்றான்எந்தை* பெருமானூர்போல்*
சேற்றேருழுவர்* கோதைப் போதூண்*
கோல்தேன்முரலும்* கூடலூரே (5.2.4)
சிறிய வாமன வடிவினனாய் மாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, மூவுலகையும் இறைந்து பெற்றவன் என்னப்பன் ! குடியானவர் தங்கள் தலைப்பாகையில் சூடியுள்ள மலர்களின் தேனுண்டு, இனிமையாக ரீங்காரமிடும் வண்டுகள் நிறைந்த திருக்கூடலூரிலும் அப்பெருமானே தங்கி அருள் பாலிக்கிறான் !
********************************
1362@
தொண்டர்பரவச்* சுடர்சென்றணவ*
அண்டத்துஅமரும்* அடிகளூர்போல்*
வண்டலலையுள்* கெண்டைமிளிர*
கொண்டலதிரும்* கூடலூரே (5.2.5)
அண்டத்தை வியாபித்த பேருருவம் எடுத்த ஒளி மிக்க ஆதி பிரானை அடியார்கள் சூழ்ந்து போற்றி வணங்குகின்றனர் ! அவ்வண்ணலே, சூரிய ஒளி பட்டு மின்னும் மீன்கள், நீரின் மேற்பரப்பு அதிர,துள்ளி விளையாடும் சுனைகள் நிறைந்த திருக்கூடலூரில் கோயில் கொண்டுள்ளான்.
******************************
1363@
தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*
துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*
எக்கலிடு* ஞுண்மணல்மேல்* எங்கும்
கொக்கின் பழம்வீழ்* கூடலூரே (5.2.6)
**********************************
1364@
கருந்தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*
பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)
கரிய, குளிர்ந்த கடல்களையும், மலைகளையும், உலகங்களையும், பிரளயத்தின் போது காக்க வேண்டி உண்ட பரந்தாமன், முல்லைக் கொடி வளர்ந்து பரவி, குருந்த மரங்களை தழுவி மறைத்து விடும் வனப்புடைய திருக்கூடலூரில், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான்.
*******************************
1365@
கலைவாழ்* பிணையோடு அணையும்* திருநீர்
மலைவாழ் எந்தை* மருவும்ஊர்போல்*
இலைதாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்
குலைதாழ்கிடங்கின்* கூடலூரே (5.2.8)
************************************
1366@
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவரூர்போல்*
அருகுகைதைமலர* கெண்டை
குருகென்றஞ்சும்* கூடலூரே (5.2.9)
என் ஐயனை அடைய வேண்டும் என்கிற பேரவா நாளுக்கு நாள் பெருக, என் உள்ளமானது சதா சர்வ காலமும் அவன் ஒருவனையே எண்ணி உருகுகிறது ! கரைக்கு அருகில் வளர்ந்திருக்கும் தாழை மலர்களை, தம்மைக் கொத்த வந்த நாரைகள் என்றெண்ணி அஞ்சும் மீன்கள் வாழும் தடாகங்கள் நிறைந்த திருக்கூடலூரில், கருணை மிக்க அவ்வண்ணல் எழுந்தருளி உள்ளான்.
********************************
1367@..
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்
மேவித்திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாடப்* பாவம் போமே (5.2.10)
******************************************
...............ஊர்த்வ புண்ட்ரம்..................
ஒரு சமயம், கொள்ளிடம் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், இத்திருக்கோயில் மூழ்கி, விக்ரகங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வெள்ளத்தில் மூழ்கிய விக்ரகங்கள் அருகில் உள்ள கீழ் வளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த தீக்ஷிதர் ஒருவரின் கனவில் பார்த்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வூரிலேயே 1741ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. தற்போது நாம் காணும் (பாபனாசத்துக்கு அருகே பெருமாள் கோயில் என்ற கிராமத்தில் உள்ள) கோயிலை, ராணி மங்கம்மாள் கட்டியதாக (அல்லது புதுப்பித்ததாக) தெரிய வருகிறது.
கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
புகைப்படங்கள் உதவி: ராமானுஜ தாஸர்கள் வலைத்தளம்
*** 265 ***
8 மறுமொழிகள்:
சோதனைப் பின்னூட்டம் !
பாலா
பாலா,
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். படங்களும் அதற்கு மெருகு சேர்க்கிறது. தொடருங்கள்.
ராமானுஜ தாஸர்கள் வலைத்தளத்தின் URL கிடைக்குமா ?
Thanks, Desikan,
I am glad that you read this posting earlier than usual :))
Yours is the second comment ;-)
கூடலூர் திவ்ய தேசம் குறிப்புகள் தந்தமைக்கு நன்றி பாலா!
ப்லா மரச் சங்கு புதிய செய்தி!
அடியார்கள் உய்ய, உய்ய வந்த பெருமாள், மீது மங்கை மன்னனின் பாசுரங்கள் அத்தனையும் இனிமை!
நாளை Dec3 கார்த்திகை தீபம், மற்றும் திருமங்கை நட்சத்திரம்; மாதவிப்பந்தலுக்கு வாங்க, மங்கையர் கலிக்கோனைக் காண!!!
பாலா அவர்களே!
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படங்கள் மிக அருமையாக இருக்கின்றன. மிக்க நன்றி!!!
திவ்ய தேசங்களைப் பற்றியப் பதிவுகளை தொகுப்பாக வெளியிடும் எண்ணம் உண்டா...
//Yours is the second comment ;-)//
நியாயாமாகப் பார்த்தால் தேசிகனுடைய பின்னூட்டம்தான் முதல் ;-)
ஸ்ரீதர் வெங்கட், கண்ணபிரான்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
//நாளை Dec3 கார்த்திகை தீபம், மற்றும் திருமங்கை நட்சத்திரம்; மாதவிப்பந்தலுக்கு வாங்க, மங்கையர் கலிக்கோனைக் காண!!!
//
நிச்சயம் வருகிறேன் !
//திவ்ய தேசங்களைப் பற்றியப் பதிவுகளை தொகுப்பாக வெளியிடும் எண்ணம் உண்டா...
//
பார்க்கலாம் !
எ.அ.பாலா
kannabiran,
//நாளை Dec3 கார்த்திகை தீபம், மற்றும் திருமங்கை நட்சத்திரம்; மாதவிப்பந்தலுக்கு வாங்க, மங்கையர் கலிக்கோனைக் காண!!!
//
Pl. check. I have commented in your posting :)
பாலா. பல நாட்கள் ஆயின இந்தப் பலா பதிவைப் படிக்க. :-) இத்தனை நாட்கள் படிக்காமல் இருந்ததற்கு என்னைக் கண்டித்துக் கொண்டேன். திருக்கூடலூர் திவ்ய தேசம் என்று கேள்விப் பட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை அதனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். பெருமாள், தாயார், நரசிம்மர், சக்கரத்தாழ்வார், மாமுனிகள் என்று எல்லார் தரிசனமும் சிறப்பாக அமைந்தது. கலியன் பாடலமுதினையும் பருக முடிந்தது. மிக்க நன்றி.
தேசிகன் கேட்ட கேள்வியே எனக்கும். அவருக்கு மின்னஞ்சலில் பதில் சொல்லியிருந்தால் அதனையே அடியேனுக்கும் செய்ய வேண்டுகிறேன்.
Post a Comment